சென்னை: உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் 'சென்னை மாநகர கூட்டமைப்புத் திட்டம்' மற்றும் இந்திய அரசின் 'நிர்பயா திட்டத்தின்' கீழ், பெருநகர சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” (Gender and Policy Lab) உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பெண்களின் பாதுகாப்பு: அப்போது பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், '’பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் 'பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்' தொடங்கப்பட்டுள்ளது. இது பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் மேற்கொள்ளும் பிரச்னைகளைtத் தடுப்பதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதற்கட்டமாக, மண்டலம் 4 மற்றும் 5இல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
சுரங்க நடைபாதைகளில் அதிகளவு தெரு விளக்குகள் இல்லாததால், விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பெண்களின் பாதுகாப்பிற்காக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கானப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
கடும் நடவடிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் வெளியில் வரும் பெண்கள், கழிப்பிட வசதிகள் இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. இதனை சரி செய்வதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படும் கழிப்பறைகள் மிகவும் பாதுகாப்பானதாகவும், நவீன முறையிலும் இருக்கும். அதனைப் பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மொபைல் டாய்லெட் வசதியை ஏற்படுத்துவதற்காக ரூ.5.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், என்எஸ்சி போஸ் ரோடு மற்றும் சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மொபைல் டாய்லெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலவச கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.