சென்னை:கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளையும் தடுப்பூசி செலுத்தும் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க உத்தரவிடக்கோரி சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையத்தின் இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், முன்னதாக இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இன்று (ஏப்.19) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகளை முன்னுரிமை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்க தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.