சென்னை: கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட 'மிக்ஜாம்' (Michaung) புயல், டிசம்பர் 5ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. இதனிடையே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் கனமழை நின்றாலும் கூட, இன்னும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் அதிகமாகக் காணப்பட்டன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்தது.
இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேசிய மீட்புப் படையினர், மாநில மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி:தொடர்ந்து3வது நாளாக வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குடிநீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் சிக்கியுள்ள மக்களுக்கு அரசுத் தரப்பிலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.