தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் சங்கங்களின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியுமென நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (ஜூன் 30) தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தனியார் பள்ளிகள், கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றுதான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.