இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று(மே 27) செய்தியாளர்களைச் சந்தித்து தனியார் பள்ளிகள் இணையதள வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்திக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்களின் சார்பில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றோம்.
60 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி மாணவர்கள் கரோனா எனும் கொடிய நோய், ஊரடங்கு காரணமாக வீட்டுச் சிறையில் முடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில், படித்ததை மறந்து விட்டார்கள் கற்பதை நிறுத்திக் கொண்டார்கள். அதை மீட்டெடுப்பதற்காக தனியார் பள்ளிகள் பெற்றோரிடமோ, மாணவரிடமோ எந்தவித கல்விக் கட்டணமும் பெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன.
இதற்கு முன் கல்வி அமைச்சர் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று சொல்லியிருக்கிறார். உயர் நீதிமன்றங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று சொல்லியிருக்கிறது. அதற்கான கட்டணம் கூட பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்குவித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுத்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிப்பதற்கு தடையில்லாமல் படிப்பதற்குத் தடை போட்ட ஒரே அரசு தமிழ்நாடு அரசாகத்தான் இருக்கும்.