சென்னை:தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் நிர்வாகி இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி. இவர் கடந்த 13ஆம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
புலன் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் 17ஆம் தேதி பெற்றோர் என்ற போர்வையில் பள்ளிக்குள் சில சமூக விரோத கும்பல் அத்துமீறி நுழைந்து, பள்ளியின் மீது ஏற்கெனவே இருந்த காழ்ப்புணர்ச்சியால் பள்ளியின் பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினரை கல்வீசித்தாக்கி மற்றும் காவல் துறை வாகனங்களை தீ வைத்து கொளுத்தியும் பள்ளியின் உடைமைகளை கட்டடம் தவிர மற்ற அனைத்து உடைமைகளையும் (மாணவர்கள் சான்றிதழ் உள்பட) கடுமையாக சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டது நேரடியாக தெள்ளத்தெளிவாக காட்டப்பட்டது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (ஜூலை 18) ஒருநாள் மட்டும் அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளை மூடி சமூக விரோத கும்பலைக் கைது செய்யக் கோரியும் அனைத்து தனியார் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு கோரியும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று 60 விழுக்காட்டிற்கும் மேல் பள்ளிகள் இயங்கவில்லை.