தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்: உயர் நீதிமன்றம் - private schools tuition fees

உயர்நீதீமன்றம்
உயர்நீதீமன்றம்

By

Published : Jul 17, 2020, 3:49 PM IST

Updated : Jul 18, 2020, 1:07 AM IST

15:45 July 17

தனியார் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முதல் தவணையாக 40 சதவீதம் மட்டும் வசூலித்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு ஏப்ரல் 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. 

அதே சமயம், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. அந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "மனுதாரர் சங்கங்கள் அளித்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரீசீலித்து அரசு, தனியார் கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் என மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது.

மேலும், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 75 சதவீத கட்டணத்தை மூன்று தவணைகளாக பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 25 சதவீதமும், பள்ளிகள் திறந்த பின் 25 சதவீதமும், பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் கழித்து 25 சதவீதம் என வசூலிக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு இந்தாண்டுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்த பின் வசூலித்துக் கொள்ளலாம். பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது பள்ளிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கட்டணம் செலுத்த தவறும் மாணவர்கள் தண்டிக்கப்பட்டால் பள்ளிகள் மீது அரசு சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தற்போதைய சூழலில் சாத்தியமில்லை. அரசுக்கு நிதி நெருக்கடி உள்ளது. அதேபோல பெற்றோர்களும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதையடுத்து தனியார் பள்ளி, கல்லூரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதுபோல, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பாட புத்தகம் வழங்க வேண்டும். அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம். மேலும் இந்தாண்டு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தனியார் பள்ளிகள் 40 சதவீத கட்டணத்தை மட்டும் முன் கட்டணமாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம். 2019-20 கட்டண பாக்கியை வரும் ஆகஸ்ட்டிற்குள் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாம் தவணையாக 35 சதவீத கட்டணத்தை 2 மாதங்களுக்கு பின் பெற்றோர்கள் செலுத்தலாம்.  

இந்த நடைமுறையை ஆகஸ்டில் தொடங்கி 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். கட்டண நிர்ணய குழுவின் முடிவை பொறுத்து 3ஆம் கட்ட கட்டணத்தை வசூலிக்கலாம். இடைப்பட்ட காலத்தில் தனியார் பள்ளி, ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரக்கூடாது. அரசு தனியார் பள்ளிகளுக்கும் இலவச பாட புத்தகம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து திட்டம் வகுக்க வேண்டும். 

இந்த இடைக்கால உத்தரவானது நீதிமன்ற மறு உத்தரவு வரும்வரை அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் நிவாரண நிதி தகவல் குறித்த வழக்கு: தரவுகளை இணையத்தில் பதிவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Jul 18, 2020, 1:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details