தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்! தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு! - Department of School Education

தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை பள்ளிக்கல்வித்துறை கட்டாயமாக்கி உள்ளது எனவும், அனைத்து தனியார் பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tamil subject is compulsory in all private schools
Tamil subject is compulsory in all private schools

By

Published : May 23, 2023, 7:58 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பல தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்படாத நிலை உள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தன. சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பள்ளிகள் தொடங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறையின் தடையின்மை சான்றிதழ் மற்றும் பெற்றால் போதும் என இருந்தது. இதனால் கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி உத்தரவிட்டது. ஆனால் அதனை செயல்படுத்தாமல் தனியார் பள்ளியில் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்த நிலையில் 2015 - 2016 ஆம் ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 2024 - 2025 ஆண்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாயம் எழுத வேண்டுமென தெரிவித்தது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் துறை இயக்குனர் நாகராஜன் முருகன் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழக பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, 2015 - 2016ஆம் ஆண்டில், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாய பாடமானது.

அதற்கு அடுத்த, 2016 - 2017ம் கல்வி ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும், அடுத்த கல்வி ஆண்டில் மூன்றாம் வகுப்புக்கும் என, ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது. கடந்த 2022 - 2023ம் கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக அமலானது.

அடுத்த மாதம் துவங்க உள்ள, 2023 - 2024ம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், 2024 - 2025ம் ஆண்டில், 10ம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது. மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 - 2025ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.

இந்த மாணவர்கள், பொது தேர்விலும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டியதும் கட்டாயம். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும். எனவே, அனைத்து தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தி, மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும்.

தமிழ் கட்டாய பாட முறை குறித்த அறிவிப்பை, தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்" என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'IASஆவதே கனவு' 470 மதிப்பெண்கள்..பள்ளியிலேயே முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவி ரியாஸ்ரீ!

ABOUT THE AUTHOR

...view details