சென்னை: தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ இலவசக் கட்டாயக் கல்வி சட்டம் 2005 இன் படி தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் இதுவரையில் கடைப்பிடித்த நடைமுறைகளை மாற்றி அதிகாரிகள் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவான மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தியும், மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்தும் இவ்வளவு மாணவர்கள் தான் சேர்க்க வேண்டும் என்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
பள்ளிகளே செயல்படாமல் இருந்த நேரத்தில் கூட அரசு விதிப்படி விண்ணப்பித்து காத்திருக்கிற பெற்றோர்கள் குழந்தைகள் சென்ற ஆண்டை காட்டிலும் இந்தாண்டு பள்ளி தொடர்ந்து தொய்வின்றி நடந்து வரும் வேளையில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அட்மிஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்து காத்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையை குறைத்து அளவீடு செய்து அதிகாரிகள் வெளியிட்டுள்ளது தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்குரிய ஆர்டிஇ கல்வி கட்டண பாக்கியை 25 சதவீதம் குறைத்துக் கொடுத்தனர். அதுவும் இன்னும் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி கட்டண பாக்கி அப்படியே நிலுவையில் உள்ளது.
2021-22 ஆம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டண பாக்கி இன்னும் ஒரு பைசா கூட தரவில்லை. இப்படித் தொடர்ந்து குழப்பங்கள் நிலவினால் அரசுக்குத்தான் கெட்ட பெயர் உருவாகும். தனியார் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த பொருளாதார சிக்கலுக்கு இடையில் சிக்கித் தவிக்கிற சூழ்நிலையில் உடனடியாக நிலுவையிலுள்ள சென்ற ஆண்டு கல்வி கட்டண பாக்கியை வழங்கிட வேண்டும்.
மேலும் இந்த ஆண்டு சேர்க்கைக்கு குலுக்கலில் கடைபிடித்து வந்த நடைமுறையையே தவறாமல் கடைபிடித்து ஏழை மாணவர்கள் 25 சதவீத சேர்க்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கிட வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தி ஆணையிட வேண்டும் .
சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை முடித்து ஆர்டிஇ மாணவர்கள் சேர்க்கையை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"நமது குப்பை, நமது பொறுப்பு" - குப்பை தரம் பிரிப்பது தொடர்பான விழிப்புணர்வு!