இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கடந்த ஆண்டு முழுக்க வகுப்பறையில் பாடம் நடத்தவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மிகச் சிறப்பான முறையில் இணையதளம் வழியாகப் பாடங்களை நடத்தி முடித்திருக்கிறோம்.
அப்போதைய அரசு பாடங்களை குறைப்பதாகக் கூறினார்கள். ஆனால் கடைசி வரை எவ்வளவு பாடங்களை குறைத்தனர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. தனியார் பள்ளிகள் முழுமையாக அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்திருக்கிறோம். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்துவது என்பது தவிர்க்க முடியாதது.
அந்த மாணவர்கள் உயர்கல்வி தொடர வேண்டுமென்றால் கட்டாயம் அரசு பொதுத்தேர்வு எழுதி, அவர்களுக்குரிய மதிப்பெண்களைப் பதிவு செய்து அனுப்பினால்தான் அவர்களுக்கு வேண்டிய பாடங்களைத் தேர்வு செய்து படித்து பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற முடியும். அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன் இல்லை, இணையதள வசதி கிடைக்காது என்பதால் ஓரிரு மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதனால் வகுப்பறை தேர்வுகளை நடத்தி ஆக வேண்டும்.
இந்தக் கொடிய நோய் தொற்று காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக அச்சமின்றி தேர்வு எழுத வேண்டுமானால், அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களும் தடுப்பூசியை கட்டாயம் போடவேண்டும். எனவே உடனடியாக அந்ததந்த பள்ளிகளிலேயே தடுப்பூசி போடத் தொடங்க வேண்டும்.