சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 12) நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை நடத்தும் பணிகளில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே அரசுத் தேர்வுத்துறையால் மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு வழங்கப்பட்ட உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "தேர்வு மையத்தின் முக்கியப் பொறுப்பான முதன்மைக் கண்காணிப்பாளர் பணியில் தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களையோ அல்லது அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களையோ தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்தல் கூடாது. 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகாமல் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்களை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வுமையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது. அரசுப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்களே துறை அலுவலராக நியமனம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை துறை அலுவலராக நியமனம் செய்து கொள்ளலாம்.
ஒரு தேர்வு மையத்திற்கு நியமிக்கப்படும் முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலரும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருத்தல் கூடாது. கடந்த ஆண்டு தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு நடப்பு ஆண்டும் அதேபோல ஒதுக்கீடு செய்யப்படக் கூடாது. ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களின் எண்ணிக்கை 500-க்கு மேல் இருப்பின், ஒவ்வொரு 500 தேர்வர்களுக்கும் ஒரு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் ஒரு கூடுதல் துறை அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும். தேர்வுமையத்தில் 500 தேர்வர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் தேர்வர்கள் தேர்வெழுதும் நாட்களில் தேர்வு மையத்தில் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் துறை அலுவலரை பயன்படுத்தக் கூடாது.
அறைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தினை சொல்லித் தரும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும். நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, ஆய்வு அலுவலரால் (முதன்மைக்கல்வி அலுவலர்) குறிப்பிடப்படும் நாளன்று, தலைமையாசிரியர்கள் கட்டாயம் பணிவிடுவிப்பு செய்ய வேண்டும். முதன்மைக்கல்வி அலுவலரின் அனுமதியின்றி மாற்றமோ, பணிக்கு வராமல் இருப்பதோ கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. வாய்மொழி ஆணைகள் கண்டிப்பாக கூடாது.