இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்டத்தின்படி. 2011 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு கட்டப்படும் அனைத்து வகையான கட்டடங்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்குவதற்கு முன்னர், நகர் மற்றும் ஊரமைப்பு துறை இயக்குநரின் அனுமதி பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் கட்டட வரைபட அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கும் பள்ளிகளுக்கு, கட்டட வரன்முறைக்கு விண்ணப்பம் செய்ய 2020, மே 31ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து பள்ளியை நடத்தி வருவது சட்டத்தை மீறிய செயலாகும். மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு பள்ளிகள் உரிய அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும்.