பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கல்வி நிறுவனங்களும், சங்கங்களும் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது. இதில், பள்ளிகள் கடந்த ஆண்டில் வசூலித்த கட்டணத்தில் 75 விழுக்காடு கட்டணத்தை வசூலிக்கலாம், முதல் தவணையாக 40 விழுக்காடு கட்டணத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் மீதமுள்ள 35 விழுக்காடு தொகையை வசூலிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எச்சரித்தார்.
இந்நிலையில் 40 விழுக்காடு கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்றம் நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று (செப்.,7) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், 40 விழுக்காடு கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராகப் புகார் அளிக்க தனி மின்னஞ்சல் முகவரி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளி கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார்.
இதுவரை பெறப்பட்ட 75 புகார்களில் 29 பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியது கண்டுபிடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தகவல் தெரிவித்தார். பெற்றோர் தரப்பில் 40 விழுக்காடு கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக, அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'பள்ளிகள் வெவ்வேறு பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், வெவ்வேறு பெயர்களில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும்' எனத் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு முதல் தவணையாக 40 விழுக்காடு கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். கூடுதல் கட்டணத்தை வசூலித்த பள்ளிகள் பட்டியலையும் அவற்றின் மீதான நடவடிக்கையை அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கும் தள்ளிவைத்தார்.
மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கையுடன், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார். கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கும், பள்ளி கல்வி துறைச் செயலாளருக்கும் நீதிபதி பாராட்டுத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை அரசே ஏற்கக் கோரிய வழக்கு : தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு