தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளிகள் கட்டணம் விவகாரம் - நாளை உத்தரவு

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Private school fees collection, order tomorrow, mhc
Private school fees collection, order tomorrow, mhc

By

Published : Jul 29, 2021, 7:19 PM IST

Updated : Jul 29, 2021, 8:06 PM IST

சென்னை : கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, முறையே 40, 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.


இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் வாதம்

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ”உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்பு 2021-22ஆம் கல்வியாண்டிலும், 2019-20ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து, ஜூலை 5 ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும். கட்டண நிர்ணய குழுவில் உள்ள காலியிடங்கள் இரு மாதங்களில் நிரப்பப்படும்” என தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார்.

நாளை உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பாக நாளை(ஜூலை.30) உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் வாய்ப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அவர் முடிவு எடுப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காற்று தர அளவீட்டு கருவிகள் வைக்க மாநகராட்சி திட்டம்

Last Updated : Jul 29, 2021, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details