தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளிகளுக்கு ஒரே மாதிரி கட்டணம் நிர்ணயிக்க வேண்டுகோள்

சென்னை: அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சார்பில் தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி
தனியார் பள்ளி

By

Published : May 12, 2021, 3:20 PM IST

பள்ளி கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் பாலசுப்பிரமணியத்துக்கு தனியார் பள்ளிகளின் சங்கம் சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில்,'கரோனோ பரவல் காரணமாக கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவுப்படி, இந்த ஆண்டு கட்டண நிர்ணயம் தொடர்பாக வரும் 17ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் சார்பில் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாது.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொருவிதமான கட்டணங்களை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் நடப்பு கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணத்தை பள்ளி கட்டண நிர்ணயக் குழு குறைத்துள்ளது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக, ஐந்தாம் வகுப்பு வரை ஒரு கட்டணமும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு மாதிரியான கட்டணமும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கட்டணமும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கட்டணமும் என்று நான்கு வகையான கட்டணங்களை கணக்கிட்டு பெற முயற்சிக்க வேண்டும். மேலும் அரசு ஒரு பள்ளி மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே கல்விக் கட்டணமாக கொடுத்தால் போதுமானது.

அதற்கு மேல் யாரும் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவு சட்டத்தைப் போட்டு அமல்படுத்தலாம். இந்த தொகைக்கு மேல் ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக கட்டணம் வேண்டும் என்றால், அந்தப் பள்ளியில் உள்ள வசதி வாய்ப்புகளை ஆய்வு செய்து அவர்களுக்கு வேண்டுமானால் உயர்த்திக் கொடுக்கலாம்.

அதை விட்டுவிட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு மாதிரியான கட்டணம் என்பது நியாயப்படியும் தர்மப்படியும் சரியாக வராது. தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் கல்வியின் அடிப்படையிலேயே மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பாடங்களை நடத்தி வரும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்க வேண்டும்'எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மீண்டும் ரோஜா கண்காட்சி ரத்து: மக்கள் இல்லாமல் பொலிவிழந்த பூக்கள்!

ABOUT THE AUTHOR

...view details