சென்னை: வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது வனக் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் கேரள அரசின் பிரதிநிதியாக எவரும் நியமிக்கப்படவில்லை என்பதால், மார்ச் 16ஆம் தேதிக்குள் பிரதிநிதியை நியமித்து, அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அபாயகரமான மின்வேலிகளால் விலங்குகள் பலியாவதை தடுக்க மின்வேலிகள் அமைப்பது தொடர்பான விதிகளை வகுக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விதிகளை இறுதி செய்யும் வரை விலங்குகளுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மின்வேலிகளை அமைக்கும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர். வனத்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து, அபாயகரமான வேலிகள் அமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.