சென்னை:கோயம்பேடு பகுதியைச்சேர்ந்தவர், பத்மநாதன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பத்மநாதன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போன், வாட்ச் மற்றும் 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மநாதன் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பெரியமேடு பகுதியில் உள்ள உணவகத்தில் போதையில் மாமூல் கேட்டு உணவகத்திற்கு உணவருந்த வந்த இளைஞரைத் தாக்கியவர்கள் எனத்தெரியவந்தது.
மேலும் அந்த சம்பவத்தில் சிறைக்குச்சென்ற அவர்கள் சிறையில் இருந்து 5 நாட்கள் முன்பாக வெளியே வந்ததும், சிறைக்குச்சென்றும் அடங்காத அவர்கள் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்தில் மனைவியிடம் தகாத முறையில் நடந்தவரை தட்டிக்கேட்ட கணவர் - காவலர் எனக்கூறி மிரட்டிய ஆசாமி