சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான மும்பையை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நிறுவனத்திற்கு அரசு ஒப்பந்தம் செய்தது.
சுமார் 612 கோடி ரூபாய் அளவிற்கு 36 லட்சத்து 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, அதை வருடாந்திர நிர்வகிக்கும் சேவைகளையும் ராஜனின் இரண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் படி செய்ய வேண்டிய வேலைகளை ராஜனின் நிறுவனம் காலதாமதம் செய்ததன் காரணமாக, சுமார் 51 கோடி பணம் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.
இந்த நிலுவைத் தொகையை விடுவிப்பது தொடர்பாக ராஜன் அரசு கேபிள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் நிலுவைத் தொகை வராததால் ஆத்திரமடைந்த ராஜன் செட்டாப் பாக்ஸ்களுக்கு சேவை வழங்க கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தியுள்ளார். அரசு பொதுமக்களுக்காக அளித்த கேபிள் சேவையை சீர்குலைக்கும் வகையில், தன் கட்டுப்பாட்டில் செயல்படும் 21 லட்சம் அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் செட்டாப் பாக்ஸ் செயல்படாமல் தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் கடந்த 2 நாட்களாக அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒளிபரப்பு தடையானதால் அரசு கேபிள் டிவி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.