கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு சிறைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 3500க்கும் மேற்பட்ட சிறை கைதிகளை இடைக்கால ஜாமீன் வழங்கி விடுதலையும் செய்தனர்.
மேலும் கைதிகளைப் பார்க்க வரும் பார்வையாளரின் நேரத்தை தடை செய்து வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேசவும் சிறைத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் குற்றம் புரிந்து புதிதாக சிறைக்கு வரும் குற்றவாளிகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் முழுவதுமாக பரிசோதித்து தனி அறையில் வைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், புதிய கைதிகளுடன் ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதிகள் தொடர்பு கொள்ளாதவாறு வைத்திருக்க வேண்டும் எனவும் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் அனைத்து சிறைத்துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.