கோயம்முத்தூர் மாவட்டம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (57), வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மோகனா. ஒடிசாவைச் சேர்ந்தவர். ராஜவேல் மனைவி மோகனா மீது ஒடிசாவில் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன.
இந்த வழக்கில் இருந்து மனைவியை காப்பாற்ற திட்டமிட்ட ராஜவேல், சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது அலுவலகத்துக்கு ஒரு வழக்கு தொடர்பாக வந்திருந்த ரத்தினபுரியைச் சேர்ந்த அம்மாவாசை (45) என்ற பெண்ணை தன் மனைவியுடன் இணைந்து எரித்துக் கொன்றார். கொலை வழக்கு, போலி சான்றிதழ் ஆகிய காரணங்களுக்காக ராஜவேல், மோகனா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜவேல் கோவை மத்திய சிறையிலும், மோகனா கோவை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 26) சிறையில் டவர் பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த ராஜவேல், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட சிறைக்காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜவேல் உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்' - இறைஞ்சும் சரத்குமார்