சென்னை: நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தபோது நேர்காணலை ரத்து செய்து, கானொலி அழைப்பின் மூலம் சிறைவாசிகள் உறவினர்களுடன் பேசிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து மீண்டும் பழைய முறைப்படி கரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நேர்காணல் நடத்தப்பட்டது.
தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் நேர்காணல் நடைமுறைகள் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று(ஜன.6) முதல் அமல்படுத்தப்படும் என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாதம் இரு முறை மட்டுமே நேர்காணல் நடத்தப்படும் எனவும், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணலுக்கான நேரம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலின்போது 1 பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறைவாசிகளைக் காண வருபவர் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்து பெற்ற நெகட்டிவ் கரோனா சான்றிதழை கொண்டு வரவேண்டும் எனவும் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள கிளைச் சிறைகள், சிறப்பு கிளைச் சிறைகளில் நேர்காணலுக்கு அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதர கரோனா வழிகாட்டு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், தகுந்த இடைவெளி பின்பற்றுதல் போன்றவைகள் சிறைச்சாலைகளில் முறையாக பின்பற்றப்படும் எனவும் சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:TNPSC Exams: தள்ளிப்போகும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்