சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜன. 01) திறந்துவைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2020ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மக்கள் நல்வாழ்வுத் துறையில் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட அனைவரும் 24 மணி நேரமும் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்று வந்த பின்னர் உள்கட்டமைப்பு வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தியுள்ளோம்.
கரோனாவால் ஒரு நாளைக்கு 127 பேர் இருந்த நிலையை மாற்றி, தற்போது அரசு மருத்துவமனையில் இணை நோய்கள் போன்றவற்றால் ஏற்படும் இறப்புகளையும் ஒற்றை இலக்கத்தில் கொண்டுவந்துள்ளோம். இறப்பு இல்லாத நிலையை அரசு மருத்துவமனையில் உருவாக்குவோம். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பாளர்களில் 97.5 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.