தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கும் சட்டம், நடப்புக் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு கல்லூரியில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தொழிற்கல்வியில் இடஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதா ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தாக்கல்செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்திற்குத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டத்தின் மூலம் 7.5 விழுக்காடு முன்னுரிமை வழங்கியுள்ளதுபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் இடம் கிடைக்கும்.