சென்னை : உலக செவிலியர் தினம் மற்றும் அண்மையில் நடந்த தீ விபத்தின்போது சிறப்பாக செயல்பட்டு நோயாளிகளின் உயிரை காப்பாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு விழா ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில் தீ விபத்தின்போது சிறப்பாக செயல்பட்டு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட ஊழியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உறவு முறை சார்ந்த பெயரோடு இருப்பது செலிவியர் பணி மட்டுமே. இத்துறையில் பேரிடரை விட பணிமாறுதல் தான் பெரிய சவாலாக இருந்தது. வசதி படைத்தவர்கள் மட்டுமே விருப்பப்படும் இடத்திற்குச்செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இதை மாற்ற வெளிப்படையான கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
இந்த ஓராண்டில், மருத்துவர், செவிலியர், மருத்துவ களப்பணியாளர்கள் 13,000 பேருக்கு விருப்பிய இடத்திற்கு எந்த செலவும் இல்லாமல் பணிமாறுதல் பெற்றுள்ளனர். வேலை வாய்ப்பில் ஒப்பந்தம், அவுட் சோர்சிங் இருக்கக் கூடாது என நினைக்கிறோம். மினி கிளினிக்கில் பணியாற்ற ஓராண்டு மட்டுமே வேலை என 1820 மருத்துவர்களைக் கடந்த ஆண்டு வேலையில் சேர்த்துள்ளனர்.
அவர்கள் பேரிடர் காலங்களில் பணியாற்றி உள்ளனர். தற்போது 7,296 பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் நகர்ப்புறங்களில் 708 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. அதில் பேரிடர் காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறது. மிக மோசமான நிலையில், காப்பாற்ற முடியாத நிலையில் வருபவர்களை கூட அரசு மருத்துவர்கள், செவிலியர் காப்பாற்றி வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் சின்ன தவறு கூட நடக்காமல் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்," என்றார்.
தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். 70 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் நாளொன்றுக்கு 150-200 அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. நாட்டிலேயே மருத்துவமனையில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க :நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்ட பணிகள் - ஸ்டாலின் திறந்து வைத்தார்