சென்னை: சமூக ஊடகவியலாளர் கிஷோர் கே சாமி, முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மழை, வெள்ள பணிகளை விமர்சிக்கும் வகையில், நவம்பர் 1ஆம் தேதி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பியது. நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி பல நோட்டீஸ்கள் அனுப்பியும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ் அல்லி முன் நவம்பர் 17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது கிஷோர் கே சாமி தரப்பில் தனது நண்பரை குறிப்பிட்டு மட்டுமே ட்விட்டரில் பதிவு செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல சமூக ஊடகங்களில் பிறரை துன்புறுத்தும் வகையில் கருத்துக்கள் பதிவிட்டதாக கிஷோர் கே சாமி மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவரும் இதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவில், விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீசுக்கு ஆஜராகாதவருக்கு முன் ஜாமின் வழங்கினால், நீதிமன்றம் இந்த சமூகத்திற்கு தவறான தகவல் அளித்தது போல் கருதப்படும் என கூறி, முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ராஜிவ் கொலை வழக்கு - 6 பேர் விடுதலையை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசு கோரிக்கை