சென்னை:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்துறை வசிக்கும் 12ஆம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பொது பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரப்பாபு, நாங்குநேரி பகுதிக்கு நேரில் சென்று அங்கு ஆராய்ந்து தற்போது உடனடியாக எடுக்கக்கூடிய 36 பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளார்.
இது குறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது, “திருநெல்வேலியில் நாங்குநேரி சம்பவத்தை குறித்து ஆய்வு செய்தோம். தமிழ்நாட்டில் சாதிய சக்திகள் மாணவர்களை மையமாகக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதில்லை, அதனால் சாதி ஒழிப்பு பற்றியோ பாகுபாடு பற்றியோ பேசுவதில்லை.
அனைவரிடமும் சாதி வெறி உள்ளது என்ற கருத்து தவறானது. நாங்கள் ஆய்வு மேற்கொண்டதை தமிழ்நாடு அரசிடம் கொடுத்துள்ளோம். இதில் பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளும் சம்மந்தப்பட்டிருக்கிறது. அரசு உடனடியாக ஒரு சில வேலைகளை செய்ய வேண்டும். நாங்குநேரியில் பாதிக்கபட்ட மாணவனுக்கும், அவரின் தங்கைக்கும் உயர் சிகிச்சை செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். அரசு செலவில் அவர்கள் விரும்பிய படிப்பை படிக்க வைத்து. வீடு வழங்கி அரசு வேலை வழங்க வேண்டும்.
அந்த பகுதியில் 6 கிராமங்கள் காணவில்லை. குடிநீர், போக்குவரத்து என அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். சிறப்பு உட்குறு திட்டத்தை பயன்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இடம் பெயர்தல் செய்ய நினைத்தால் அதற்கும் வழிவகை செய்து தர வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட பிள்ளைகள் அவருடன் படித்த வகுப்பிலேயே இருந்தபோதும் சாதி வெறியை துண்டியவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. மாணவர்கள் அல்லாதவர்கள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அவர்கள் படிக்க விரும்பினால் அரசு படிக்க வைக்க வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் காவல் துறையில் உள்ளவர்களுக்கும் சாதி உணர்வு உள்ளது. ஜாதி உணர்வு உள்ள அதிகாரிகளை வேறு மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்ய வேண்டும். அரசு சாதிய சக்திக்கு துணை நிற்க கூடாது. பாலியல் ரீதியான சீண்டல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்குநேரி சம்பவம் முற்றுப்புள்ளி இல்லை, அரசு உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்யவில்லை என்றால் மேலும் தொடரும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தாக்குதலுக்கு உள்ளான 12ஆம் வகுப்பு மாணவருக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ரத்த நாளங்கள், நரம்பு, தசை, எலும்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் குறித்து துறைசார்ந்த மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து, மாணவர் முழுமையான குணமடைய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை முடியும்வரை மாணவர் மருத்துவமனையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சைத் தொடர வேண்டும்.
காவல் துறைத் தலைவராக இருந்த W. I.தேவாரம், மிகவும் மோசமான விபத்தில் சிக்கி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அத்தகைய கோர விபத்தின் பாதிப்பில் இருந்து மீண்டும் அதே மிடுக்குடன் காவல் துறைத் தலைமைப் பணியை மேற்கொண்டார். அன்றைய தேதியில் அத்தகைய சிகிச்சை சாத்தியப்பட்டது என்கின்றபோது, இன்று மருத்துவ சிகிச்சை முறையில் பல்வேறு முன்னேற்றம் அடைந்துள்ளது.