சென்னை: இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவினை முடித்தப் பின்னரும், கூடுதல் பாடங்களாக உயிரியல், உயிரியல் தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல் அவற்றுடன் ஆங்கிலம் பாடம் செய்முறை பயிற்சியுடன் படித்து தேர்ச்சி பெற்றாலும் நீட் தேர்வினை எழுத முடியும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் பட்டப் படிப்பிற்கான தகுதி குறித்த தேசிய மருத்துவ ஆணையத்தின் 22.11.2023 தேதியிட்ட அறிவிப்பானது வணிகச் சந்தையின் நலன் சார்ந்தது.
மருத்துவப் பட்டப் படிப்பில் சேர இரண்டு ஆண்டுகள் நேரடியான தொடர் மேல்நிலைப் பள்ளிக் கல்விப் (11 மற்றும்12 ஆம் வகுப்பு) படிப்பில் உயிரியல், உயிரியல் தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல் இவற்றுடன் ஆங்கிலம் ஆகிய பாடங்கள் செய்முறைப் பயிற்சியுடன் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. (2 years of regular / continuous / coterminous study of the subjects of Physics, Chemistry, Biology / Biotechnology, in Class 11th & 12th with practical, along with English)
தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கி உள்ள மருத்துவப் பட்டப் படிப்பு ஒழுங்கு முறைகள் 2023, (Graduate Medical Education Regulations, 2023) மேல்நிலைப் பள்ளிக் கல்வி அல்லது அதற்கு சமமானக் கல்வியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுடன் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
தேசிய மருத்துவ ஆணையம் 22.11.2023 தேதியிட்ட பொது அறிவிப்பின் மூலம் இந்த விதிகளில் திருத்தம் மேற்கொண்டு, தேசியக் கல்விக் கொள்கை 2020 அனுமதிக்கும் நெகிழ்வுத்தன்மை (flexibility) அடிப்படையில், இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிரியல் தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய படங்களை மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் (11 மற்றும் 12 ஆம் வகுப்பு) படிக்காமல் வேறு பாடங்களை படித்தவர்கள், மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், "கூடுதல் பாடங்களாக" சம்மந்தப்பட்ட கல்வி வாரியத்தின் மூலம் இப்பாடங்களைப் படித்திருந்தாலும் "நீட்' எழுதவும், மருத்துவப் படிப்பில் சேரவும் தகுதி பெற்றவர்கள் என்று அறிவித்துள்ளது.
மேலும், இந்த அறிவிப்பிற்கு முன்னர் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கும் இந்த புதிய விதிகள் (retrospectively) செல்லத்தக்கது என்று அறிவிக்கிறது. சமூக நீதியின் அடிப்படையில் பள்ளிக் கல்வி முறை அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
முழுமையான கற்றல் வாய்ப்பை பள்ளிக் கல்வி உறுதிப்படுத்தும். பத்தாண்டு அடிப்படைக் கல்வியை முடித்து இரண்டு ஆண்டுகள் (11,12 ஆம் வகுப்பு) மேல் நிலைப் பள்ளியில் ஆர்வத்துடன் செய்முறைப் பயிற்சி உட்பட அறிவியல் பாடங்களை முறையாகப் படித்த மாணவர்கள் உயர் கல்வியில் அவர்கள் விரும்பும் கல்வியைத் தொடரலாம்.
அந்த வகையில் உயிரியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களை படித்தவர்கள் மருத்துவப் பட்டப் படிப்பிலும் சேரலாம். இத்தகைய கல்வி அமைப்பு குறைந்த பட்ச சமநிலையை அனைவருக்கும் உருவாக்கித் தந்தது. தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் மாணவர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல், அதே வேளையில் அரசு தரும் ஊக்கத் தொகையையும் பெற்று 11,12 ஆம் வகுப்பு கல்வியைப் படித்து முடிக்க முடியும்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாமல் படிக்க இயலும். சமூக நீதியின் அடிப்படையிலான பள்ளிக் கல்வி முறையை அழிக்கும் சூழ்ச்சிகரமானத் திட்டங்களைக் கொண்டதனால் தேசியக் கல்விக் கொள்கை 2020யை ஏற்க இயலாது என்ற குரல் இந்தியா முழுக்க ஒலிக்கிறது.
பள்ளிக் கல்விக்கும், உயர்கல்விக்கும் தொடர்பில்லாத நிலையை "நீட்" போன்ற நடைமுறைகள் உருவாக்குகிறது. வளாகம் இல்லாத கல்வி (Education without campus) என்பதே தேசியக் கல்விக் கொள்கை 2020யின் அடிப்படைக் கோட்பாடு.
அதன் வெளிப்பாடுதான் மிகவும் அதிகப்படியான திறந்தவெளி இணையவழி பாடப்பிரிவுகள் (Massive Open Online Courses). தற்போது மருத்துவப் பட்டப் படிப்பில் சேர, அடிப்படைத் தகுதிக்கான பாடங்களை பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், பள்ளி வகுப்பிற்கு நேரடியாக செல்லாமல் கூட படிக்கலாம், தேர்வு எழுதலாம் என்ற நிலை உருவாகிறது.