சென்னை: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தன்னார்வலர்கள், பள்ளி நேரம் முடிந்த பின் மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் சென்று கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பாடம் நடத்துவார்கள்.
தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்திற்கு ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் மத்தியில் வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. இத்திட்டம் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஒத்திருப்பதாகவும், தன்னார்வலர்கள் மூலம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் மாணவர்கள் மனதில் விதைக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள்
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து கல்வியாளர், "பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, மாணவர்களின் கற்றல் குறைப்பாட்டை களைவதற்காக ரூ. 200 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் குறித்து செப்டம்பர் மாதம் சுற்றறிக்கை அனுப்பபட்டது. அக்டோபரில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அறிவிக்கப்பட்டது.
திட்டம் வகுக்கப்பட்ட காலமும், திட்டம் செயல்முறைபடுத்தப்பட்ட காலமும் வேறு. பள்ளிகள் திறக்கப்பட்டு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதால் அதற்கேற்றாற்போல் திட்ட நடைமுறைகளை மாற்றியிருக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டப் பின் அனைவரின் கவனமும், குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வருவது தான். பள்ளிக்கு வர வைத்து, அவர்களின் சிக்கலைப் புரிந்துக் கொண்டு, ஆடல், பாடல் மூலம் இலகுவாக கற்பிக்க வேண்டும். அந்தப் பணியை செய்வதற்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்த போது கூட அந்த சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காமல் கற்பித்தனர். அதேபோல் இந்த சூழ்நிலையையும் எதிர்க்கொள்ளும் திறன் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளது.
பள்ளியில் மாணவர்கள் 6 மணி நேரம் இருக்கும் போது அவர்களுக்கு கற்றல் கற்பித்தலை சொல்லித்தரலாம். ஆசிரியர்களுக்கு கற்றல் பணியைத் தவிர நிர்வாக பணிகள் செய்வதற்கு ஊழியர்களை நியமிக்கலாம். விளையாட்டு, உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்கலாம். இதனால் அரசுப் பள்ளி வலுப்பெறுவதுடன், மாணவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.