சென்னை:இரண்டு நாட்கள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து இந்திய விமானப் படையின் தனி விமானம் மூலம் இன்று (ஏப்ரல் 8) பிற்பகல் 2.50 மணிக்கு மேல் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து கார் மூலமாகச் சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, விமான நிலையத்தில் ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் அருகிலிருந்தனர்.
இதனையடுத்து விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, அடையாறு ஐஎன்எஸ் சென்றார். தொடர்ந்து பிரதமர், அங்கு இருந்து சாலை மார்க்கமாகச் சென்னையில் உள்ள டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்றார்.
அங்கு அவரை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இயக்கப்படும் பேட்டரி காரில் பிரதமர் பயணித்தார். இந்த பயணத்தின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரும் அதே பேட்டரி காரில் அமர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடைக்குச் சென்ற பிரதமர் மோடி, சென்னை முதல் கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத்ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.