பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று (பிப். 14) சென்னைக்கு வருகை தர உள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்து, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையார் கப்பற்படை தளத்துக்குச் செல்கிறார்.
அங்கிருந்து தரைவழி மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், அடையார் கப்பற்படை தளம், நேரு விளையாட்டரங்கம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அவர் செல்லும் பாதையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரம் என்பதாலும், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாலும், மோடி வருகையின் போது கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதால் மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் வருகையின் போது கொடுக்க வேண்டிய பாதுகாப்புகள் குறித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் காவல் உயர் அலுவலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளார். எந்த வித அசாம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க சென்னை முழுவதும் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.