தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடியின் பயணத் திட்டமும்.. சென்னை வாசிகளுக்கு முக்கிய அறிவிப்பும்.. - anna university

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தர உள்ள நிலையில், அவரது பயணத் திட்டம் குறித்தும் அதையொட்டி செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் தற்போது பார்க்கலாம்..

pm modi schedule
pm modi schedule

By

Published : Jul 27, 2022, 7:26 PM IST

சென்னை:மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை கோலாகமாக தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்கிறார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் 2.20 மணி அளவில் குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்படுகிறார்.

சரியாக மாலை 4.45 மணி அளவில் சென்னைக்கு வந்தடைய உள்ளார். அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மாலை 5.25 அளவில் ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் விமான தளத்துக்கு செல்கிறார்.

மாலை 5.50 மணி அளவில் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் சாலை வழியாக நேரு உள்விளையாட்டரங்கிற்கு செல்ல உள்ளார். மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டு தொடக்கி வைக்கிறார்.

இரவு 7.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக 8 மணிக்குள் ஆளுநர் மாளிகை செல்கிறார். அன்றிரவு அங்கு தங்கும் பிரதமருக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் (ஜூலை 29) 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். 11.35 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்கமாக விமான நிலையம் சென்று, தனி விமானம் மூலம் குஜராத் புறப்படுகிறார்.

இதனிடையே பிரதமர் மோடி சென்னை வருவதை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், “44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற ஜூலை 28 அன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஜூலை 28 அன்று காலை முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகையால் டிமலஸ் சாலையில் இருந்து ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல், ஈவேகி சம்பத் சாலை ஜெர்மையா சாலை சந்திப்பில் இருந்து, ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

வணிக நோக்கத்திற்கான வாகனங்கள் ஈவேரா சாலை கெங்கு ரெட்டிச்சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல் பிராட்வேயில் இருந்து வணிக நோக்கத்திற்காக வரும் வாகனங்கள் குறளகம், தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பி விடப்படும். இவ்வாறு திருப்பி விடப்படும் வாகனங்கள், வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம்.

எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட வழிகளைத் தவிர்த்து, பிற வழித்தடங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய பொதுமக்கள், தங்களது பயணத் திட்டத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டி: தயார் நிலையில் மகாபலிபுரம்!

ABOUT THE AUTHOR

...view details