சென்னை: உலகம் முழுவதும் தீபாவளி திருநாளானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் அனைவரும் அதிகாலை முதலே குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புகளை உண்டு கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர், தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் மக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி அவரது சமூக வலைத்தள பக்கத்தில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு வாய்ந்த பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது சமூக வலைத்தள பக்கத்தில், “ஒளியின் திருநாளான தீபாவளித் திருநாளில் எனது அன்புக்குரிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் வசுதெய்வ குடும்பகம் என்ற நமது சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு இது. உலகெங்கிலும் உள்ள பாரத வாசிகள், மதம் அல்லது மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாகத் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி, ஆத்மநிர்பர் பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் பிற பரிசுகளை வாங்க உறுதிமொழி எடுப்போம்.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூரில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்குச் சென்று, நம் தீபாவளியை ஒளிரச் செய்யும் பெண் தொழிலாளர்களின் உழைப்பை நேரில் பார்த்தேன். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கி அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வோம். அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது சமூக வலைத்தள பக்கத்தில், “தமிழக மக்கள் அனைவர் வாழ்விலும், தீமைகள் நீங்கி நல் ஒளி பிறக்கவும், இன்பமும், மகிழ்ச்சியும் பெருகிடவும், அன்பும் சகோதரத்துவமும் நிலைத்திடவும், தமிழ்நாடு பாஜகசார்பாக, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவரது சமூக வலைத்தள பக்கத்தில், “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உள்ளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில், “அனைவருக்கும் உளம் கனிந்த மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் ஒளிபரவி மகிழ்ச்சி பரவட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது சமூக வலைத்தள பக்கத்தில், “உலகில் மண்டிக் கிடக்கும் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார் மேலும் அவர், பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் தனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவக் கல்லூரி..! முதலமைச்சர் நவ.15இல் திறந்து வைக்கிறார் - மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!