சென்னை:தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளி இல்லாத ஊர்களில் புதிய தொடக்கப்பள்ளி உருவாக்கவும், ஏற்கனவே உள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் போதுமான இடங்களை தேர்வு செய்தும், வருவாய் துறையின் ஆவணங்களை இணைத்தும் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு தொடக்க பள்ளிகள் துவக்கப்பட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்கான நடவடிக்கைகளை தொடக்க கல்வித்துறை மேற்கொள்ளும். அதேபோல் நடுநிலை பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்த வேண்டிய பள்ளியில் குறித்தும் புதிதாக தேவைப்படும் இடங்களில் தொடக்கப் பள்ளிகளை துவங்குவதற்கான முன் விண்ணப்பிக்க வேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் , இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் விதிகள் 2011ன் படி தேவையின் அடிப்படையில் புதிதாக தொடக்கப்பள்ளி தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் குறித்த விபரத்தையும், தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய விபரத்தையும் கூகுள் வரைபடத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.