சென்னை:ஆரம்ப சுகாதார நிலைய தாற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்கம் பொதுக் குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று (நவ.6) நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு மருத்துவத்துறை கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஏ. ஆர். சாந்தி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறினார்.
முதலமைச்சரிடம் கோரிக்கை
அப்போது, “3500-க்கும் மேற்பட்ட தாற்காலிக தூய்மை பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்து வருகின்றனர். அவர்களது பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். தேசிய ஊரக சுகாதார பணியில் (NRHM) போதிய நிதி இல்லாத காரணத்தால் சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
மிகவும் குறைந்த ஊதியமான மாதம் 1500 ரூபாயும் கூட பல மாதங்களாக வழங்கபடவில்லை. 12 வருடங்களுக்கும் மேலாகப் பணி செய்து வருபவர்கள் கூட இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதே போல் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதால் பலரும் வேலையை விட்டு நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஊதியத்தை உயர்த்தி வழங்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும். அனைத்து தாற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இருவருக்கும் கோரிக்கை வைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கட்டுமர அணிவகுப்பை தொடங்கி வைத்தார் புதுச்சேரி முதலமைச்சர்