சென்னை: கே.கே. நகரைச் சேர்ந்தவர், வெங்கட்ராமன். இவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 'மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் திருக்கோயிலில் உற்சவ மூர்த்தியை தூக்கிசெல்ல பயன்படும் படிச்சட்டம் தோளுக்கினியாள் என்றழைக்கப்படும் எனவும், இது மரத்தினால் செய்யப்பட்டு மேலே வெள்ளித் தகடுகளால் கவசம் இடப்பட்டு இருக்கும்.
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த படிச்சட்டத்தில் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளித்தகடுகள் உரித்து எடுக்கப்பட்டு திருடப்பட்டுவிட்டதாக' தெரிவித்துள்ளார்.
இந்தத் திருட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும்; புதிய படிச்சட்டம் ஒன்று வெள்ளித்தகடுகளுடன் செய்து பழையது போன்றே கோயிலில் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அம்பலமான உண்மை
இந்தப் புகாரின் பேரில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வெள்ளித்தகடுகள் உரிக்கப்பட்டு திருடியது உண்மை என தெரியவந்ததால், கடந்த 1ஆம் தேதி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சொத்துக்களை கையாடல், நம்பிக்கை மோசடி, அரசு ஊழியர் நம்பிக்கை மோசடியில் ஈடுபடுதல், நம்பிக்கை மோசடி, குற்றம் நடந்தது தொடர்பாக தகவல்களை தரமறுத்தல், கூட்டுசதி, கொள்ளையடித்தல், பொருள்களை திருடுதல், ஏமாற்ற பொய்யான ஆவணங்களைத் தயாரித்தல், பொய்யாக புனையப்பட்டதை உண்மை எனப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளித்தகடுகளை திருடியதாக அந்த கோயிலில் பணியாற்றி வரக்கூடிய அர்ச்சகர்களான ஸ்ரீ நிவாச ரெங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.