சென்னை:சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தக்காளி விலை கிடுகிடுவென உயரத் தொடங்கி, இப்போது 50 ரூபாயை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் செளந்தரராஜன், "கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக 70 லாரிகளில் சுமார் 15,000 டன் அளவிற்கு தக்காளியின் வரத்து இருந்த நிலையில், தற்போது 40 லாரிகளில் சுமார் 10,000 டன்னுக்கும் குறைவாக வரத்து வருகின்றது. இதனால், தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.
தற்போது சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், மொத்த விற்பனையில் 15 கிலோ கொண்ட பெட்டி 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 60 ரூபாய்க்கும் மேல் தக்காளியின் விலை உயர வாய்ப்பு இல்லை. மழை குறைந்துள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் தக்காளியின் வரத்து அதிகரித்து விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது" என்று கூறினார்.