சென்னை:அரசுப் பள்ளி மாணவர்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற மாணவர்களை விட, அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்து முடித்துவிட்டு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களே நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கான அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்களது கல்லூரிகளில் எந்த வித கட்டணங்களையும் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 2993. இதில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முதல்முறையாக கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 630. அரசுப் பள்ளிகளில் படிக்கும்போதே தனியார் பயிற்சி மையங்களிலும், பள்ளிக்கல்வித்துறையின் பயிற்சியையும் பெற்று 630 மாணவர்கள் தற்போது இடம் பெற்றுள்ளனர். ஆனால், பழைய மாணவர்களின் எண்ணிக்கை 2363 என உள்ளது.