சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக இருக்கும் தனது கணவரை விடுப்பில் (பரோலில்) விடுவிக்க கோரி பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தபோது, தனக்கு திருமணம் ஆகும்போதுதான் கணவன் ஒரு ஆயுள்தண்டனை கைதி என்றே தெரிந்தது.
கொலை வழக்கில் கீழ் நீதிமன்றம் ஆயுள்தண்டனையை விதித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்கால பிணையில் வெளியில் வந்த அவர், அந்த விவரங்களை எல்லாம் மறைத்து தன்னை திருமணம் செய்ததாக அந்த பெண் கூறினார். இதைக்கண்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோல ஒரு வழக்கு அல்ல பல வழக்குகள் நீதிபதிகள் முன்பு அடுத்தடுத்து விசாரணைக்கு வந்தது.
அண்மையில், அஸ்லாம் என்பவரை 30 நாட்கள் விடுப்பில் விட சிறைத்துறைக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இவரும் ஆயுள்தண்டனை கைதி என்று தெரிந்து திருமணம் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கணவரை விடுப்பில் விடவேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுக்கிறார்.
அவரது மனுவில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் விடுப்பில் வெளியில் வந்த தன் கணவர், தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், அன்றே அவர் சிறைக்குள் சென்று விட்டதாகவும், தற்போது மாமியாருடன் வசிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த பெண் சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாரா? அல்லது சாதி, மத நிர்பந்தங்களின் அடிப்படையில் கட்டாயத் திருமணம் நடந்ததா? என்பது தெரியவில்லை.