சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், அறிவிப்புக்கு தடை விதித்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும், சங்க உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உள்பட 8 தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று (பிப்.13) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, சங்க துணை விதிகளின்படி தேர்தல் நடத்தும் அலுவலரை நீதிமன்றம் தான் நியமிக்க வேண்டுமே தவிர, தேர்தல் அலுவலரை தயாரிப்பாளர் சங்கமே நியமித்து தேர்தலை நடத்த முடியாது என்று வாதிட்டார். வாக்காளர் பட்டியல் முறையாக வெளியிடப்படாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் அலுவலர் யார் என கேள்வி எழுப்பினர். அப்போது தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் தரப்பில், வழக்கறிஞர் கிருஷ்ணா ஆஜராகி, தேர்தல் நடத்தும் அலுவலராக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்து அறிவிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனையேற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (பிப் 15) ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சிசிடிவி: கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ்.. ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மாயம்..