குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக மார்ச் 9ஆம் தேதி தமிழ்நாடு வந்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துக் கொண்டு இன்று (மார்ச்.11) பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், பெற்றோர்களும் இந்த பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள புண்ணிய பூமியான இந்த தமிழ்நாடு, பழங்காலம் முதல் அறிவாற்றல், கற்றலில் தலைசிறந்து விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடல்களின் செய்யுள் திரட்டுகள் உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள், அறிஞர்களால் பாராட்டப்படுகின்றன. பண்டைக்கால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள உரையின் தொன்மைகளைப் பார்ப்போமேயானால் தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்கியதில் வியப்பு ஏதும் இல்லை.
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மென்மேலும் பெருகக்கூடிய, செழித்து வளரக்கூடியது அறிவாற்றலே. எனவே, அறிவாற்றல் சொத்து, அனைத்து வகையான சொத்துக்களிலும் மிக முக்கியமான சொத்து ஆகும், ஒவ்வொரு தனிநபரின் பண்புகளை உருவாக்குவதில் அறிவாற்றலே அடித்தளமாகத் திகழ்கிறது. கற்றறிந்த இளைஞர்களுக்கு சரியான திசையைக் காட்டினால். அவர்களால், நாட்டின் வரலாற்றில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
தேசிய கல்விக் கொள்கை 2020இன் நோக்கமும் இதுவே. நாட்டின் தற்போதைய கல்வி முறை, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து, கடந்தாண்டு விவாதித்தேன். தற்காலத்தில் உருவாகும் தேவைகளுக்கேற்ற அறிவாற்றல், அடிப்படையிலான நவீன கல்வி நடைமுறைப் படுத்துவதற்காகத்தான், புதிய திறன் ஆராய்ச்சி முறையை கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அதேவேளையில், எதிர்காலத்திற்கேற்ற அடிப்படையில் கலாசார, பாரம்பரிய செழுமையை உள்ளடக்கியதாக கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.
இந்தக் கல்விக் கொள்கை, நற்பண்புகளை போதிப்பதாகவும், இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதாகவும் இருப்பது அவசியம். புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்தும்போது நவீன கற்றல், கல்விமுறையில் அடியெடுத்து வைக்க முடியும். அப்படி செய்தால் ஆராய்ச்சியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய பெரும் படையை உருவாக்க முடியும். மேலும், தேசத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப, நம் நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.
அண்ணா பல்கலை. மிகச் சிறந்த கல்வி நிறுவனம்
அண்ணாப் பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்வி மையமாகத் திகழ்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் தான், உலக மற்றும் தேசிய உயர் கல்வி நிறுவனங்களின் (என்ஐஆர்எப்) தரவரிசைப் பட்டியலில், மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும்
இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி முனைவர் அளவில் பட்டங்களைப் பெறும் ஒரு லட்சம் பேரில், சுமார் 45 விழுக்காட்டினர் பெண்கள் என தெரிவித்தனர். இன்று தங்கப்பதக்கம் பெற்றவர்கள், முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பெண்கள் வெளிப்படுத்தியுள்ள இந்த உயர்சிறப்பால், எதிர்காலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும்" எனத் தெரிவித்தார்.