சென்னை:குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள்கள் பயணமாக சென்னை வரவுள்ளார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து தனி விமானத்தில் மார்ச் 9ஆம் தேதி (செவ்வாய் கிழமை) மாலை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துவிட்டு, காரில் சென்னை ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.
மறுநாள் மார்ச் 10ஆம் தேதியன்று (புதன் கிழமை) காலை ஆளுநர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூா் பொற்கோயிலுக்கு செல்கிறார்.
அதன் பின்னர் வேலூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலையில் வேலூரிலிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்து ஆளுநர் மாளிகைக்கு திரும்புகிறார்.
மார்ச் 11ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டபின், அன்று பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி அவருடைய சிறப்பு பாதுகாப்பு படை அலுவலர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் குடியரசுத் தலைவர் பயணிக்க இருக்கும் தனி விமானம், ஹெலிகாப்டர் வரும் பகுதிகளில்பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
அதோடு நேற்று (மார்ச் 6) மதியம் சென்னை பழைய விமானநிலையத்தில் குடியரசு தலைவர் 3 நாள்கள் பயணத்தின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி சிறப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
குடியரசுத் தலைவர் பாதுகாப்புபடையின் உயர் அலுவலர் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னை பழைய விமானநிலைய பகுதியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 11ஆம் தேதி மாலை வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மீண்டும் உருவெடுத்த கரோனா: அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டும் உயர்நீதிமன்றத்துக்குள் அனுமதி