சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜீயம் முடிவெடுத்தது. இது குறித்து சமீபத்தில் இணையதளத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜீயம் வெளியிட்ட தீர்மானத்தில், கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்றக் கோரிய தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு ஆளுநரும் அவர்களது ஒப்புதலை தெரிவித்தனர்.
அதன்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், கொலிஜீயத்தின் தலைவருமான டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகளான எஸ்.கே.கவுல் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் ஐந்து நிரந்தர நீதிபதிகளான ஏ.ஏ.நக்கீரன், நிடுமோலு மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன் மற்றும் கபாலி குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டனர்.
ஐந்து கூடுதல் நீதிபதிகளின் தகுதியைக் கண்டறியும் நோக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து முன்னதாக தகவல் பெறப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டதாக கூடுதல் தகவலையும் அறிவித்திருந்தது, கொலிஜீயம். அதைத் தொடர்ந்து 2017 அக்டோபர் 26ஆம் தேதியிடப்பட்ட தீர்மானத்தின்படி, கொலீஜியத்தின் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளின் அமர்வில் நிரந்தர நீதிபதிகளின் பரிந்துரை கணக்கிடப்படுவதாகவும் தெரிவித்தது.
இது குறித்து கொலீஜியம் கூறியதாவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள ஐந்து கூடுதல் நீதிபதிகளின் தகுதி மற்றும் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்தும், பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கணக்கிடப்பட்டும் மேலும் அவர்களின் முழு அம்சங்களையும் தீர ஆராய்ந்த பின்னரே நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தது.