சென்னை:தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வந்தபோது நேற்று (செப் 30) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இதுவரை 9 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும், 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குன்னூர் விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக “தமிழகத்தில் நடந்த இந்த பேருந்து விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளது மிகவும் வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்” என குடியரசுத் தலைவர் அலுவலகம் தனது X தளத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, குன்னூர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நிவராண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.