சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 19) நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட காவலர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இரண்டு கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் அறையிலும், வெளியிலும் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மூன்று ஆணையர்கள், ஏடிஜிபி-களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்குத் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
697 வட்டார பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 75 விழுக்காடு வாக்குகள் ஒரு நபருக்குச் சென்றிருந்தாலோ, மையம் கைப்பற்றும் நடவடிக்கைகள் இருந்த மையங்களோ பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட சிறப்பு பார்வையாளராக நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.