சென்னை:இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள், கணேசமூர்த்தி, செல்வராஜ், கார்த்தி சிதம்பரம் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கவுள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், அவரை எதிர்த்து, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் அமைந்துள்ள "குழுக் கூட்ட அறையில்" காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலை நடத்த சட்டப்பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன், சட்டப்பேரவைச் செயலக இணைச் செயலாளர் இரா. சாந்தி ஆகியோர், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையின் உறுப்பினர்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். குடியரசுத் தலைவருக்கான தேர்தல், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும்.