சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் பிறந்த நாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் தேமுகவினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தனது 71ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்திற்கு விஜயகாந்த் வருகை தந்தார். காலையிலிருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்திற்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தந்தனர்.
இதனையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் சூப்பராக உள்ளார். யார் எதை சொன்னாலும் நம்பாதீர்கள். வராரு, வராரு அழகர் வாராரு என்ற பாடல் போட்டவுடன் விஜயகாந்த் டான்ஸ் ஆடுகிறார். உங்கள் அனைவரையும் பார்த்த சந்தோசம் அவர் முகத்தில் தெரிகிறது. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவலை வெளியிட்ட தொலைக்காட்சிகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீடியா, யூடியூப் சேனல்கள் விஜயகாந்தின் உடலை பற்றி தவறாக எழுதாதீர்கள். கடைக்கோடியில் உள்ள தொண்டர்கள் வருத்தம் அடைகிறார்கள். உண்மை தொண்டர்களின் வாழ்த்து விஜயகாந்தை நூறாண்டு வாழ வைக்கும். தொண்டர்களின் வாழ்த்துகள் இருக்கும் வரை விஜயகாந்த் 100 வயது வரை இருப்பார். நமது முரசு நாளைய தமிழக அரசு. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். தொண்டர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும்” என கூறினார்.