சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல்செய்தார். தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், தொண்டர்களிடமிருந்து கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து விருப்பமனு பெறப்பட்டுவருகிறது. விருப்பமனு தாக்கல் நாளை முடிவடையும் நிலையில், கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று (மார்ச் 4) விருப்பமனு தாக்கல்செய்துள்ளார்.
தேமுதிகவின் துணைச் செயலாளர்களான எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி அந்த விருப்பமனுவைப் பெற்றுக்கொண்டனர். விருப்ப மனுவில் அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதைக் குறிப்பிடவில்லை.
எனினும், அவர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தேமுதிக தொண்டரகளால் கணிக்கப்படுகிறது. அதிமுக-தேமுதிக தொகுதிப்பங்கீடு குறித்து முடிவு எட்டப்படாத நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட தொண்டர்கள் அதிகளவில் விருப்ப மனுவைத் தாக்கல்செய்ய முன்வரவில்லை என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். இதுவரை, 1,120 விருப்ப மனுக்கள் மட்டுமே தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
தேமுதிக சார்பில் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியிலும், விஜய் பிரபாகரன் அம்பத்தூர் தொகுதியிலும் போட்டியிடலாம் என்ற பேச்சு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:கட்சியின் பெயருக்கு இழுக்கு வரும் நடவடிக்கையில் தலைமை ஈடுபடாது - பிரேமலதா விஜயகாந்த்