சென்னை: சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று(டிச.14) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் பங்கேற்றார். அவரை மேடையில் பார்த்ததும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 18 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், மிக முக்கியமானதாக அக்கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“வெள்ளம் வரும் என்று எச்சரிக்கவில்லை” - முதலமைச்சர் ஸ்டாலின்
அதேபோல், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவர்களது துயரை போக்கும் வகையில் இடைக்கால நிவாரணமாக தலா 15 ஆயிரமும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாயும் உடனடியாக வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரத்தை தகுதியான மகளிருக்கு மட்டும் என்ற அறிவிப்பு பாகுபடுத்தி பிரித்து பார்ப்பதாக உள்ளதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உடனடியாக ரூ.1000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதோடு, தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பரந்தூர் விமான நிலைய பணிக்கு விளை நிலங்களை தவிர்த்து தரிசு நிலங்களை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் பாதிப்பு.. முதலமைச்சருடன் மத்திய குழு இன்று ஆலோசனை!