தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயகாந்த் அடையாளத்தை திமுக மறைக்கப் பார்க்கிறது..! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு! - Premalatha statement

Premalatha Vijayakanth: ரிஷிவந்தியம் தொகுதி மக்களுக்கு விஜயகாந்த் செய்த பணிகளை திமுக அரசு மறைக்கப் பார்க்கிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

premalatha vijayakanth accused dmk
பிரேமலதா விஜயகாந்த்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 7:47 PM IST

சென்னை:கேப்டன் விஜயகாந்தின் அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் திமுகவினரையும், அவர்களுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக நிறுவனத்தலைவர்,கேப்டன் விஜயகாந்த் 2011ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியினுடைய உறுப்பினராக மக்களின் ஏகோபித்த ஆதரவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து அரைநூற்றாண்டுக்கும் மேலாக வளர்ச்சியடையாத அந்த ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களின் தேவைகள் அறிந்து மக்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கினார். சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், நியாய விலை கடைகள் என மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினார்.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அந்த தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்த மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை அகற்றி, உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை எந்த அரசும் நிறைவேற்றாத நிலையில், விஜயகாந்த் டெல்லிவரை சென்று பிரதமரைச் சந்தித்து மத்திய சிறப்பு நிதியாக ரூபாய் 22 கோடியைப் பெற்று வந்து அந்த உயர்மட்ட பாலத்தை அமைத்தார்.

அதேபோன்று ரிஷிவந்தியம் தொகுதியில் முக்கியமான பேருந்து நிறுத்தங்களில் மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்துகளில் ஏற நிற்பதற்கு இடமில்லை, என கேப்டன் விஜயகாந்திடம், மக்கள் கேட்ட காரணத்தினால் கேப்டன் பல பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடைகளை அமைத்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் காரணமாக, மாடாம்பூண்டி கூட்ரோட்டில் ரௌண்டானா அமைக்க வேண்டுமென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அங்கிருந்த நிழற்குடையை அகற்ற முற்பட்டபோது, தேமுதிகவினரும், பொதுமக்களும் அதைத் தடுத்தனர்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுத்தவர்களிடம் மீண்டும் அருகாமையில் நிழற்குடையைக் கண்டிப்பாக அமைத்துத் தருகிறோம் என உறுதியளித்தனர். ஆனால் இன்றுவரை அதை அமைத்துத் தரவில்லை. இந்தநிலையில் மணலூர்பேட்டையில் கேப்டன் அமைத்திருந்த பயணியர் நிழற்குடையையும் கால்வாய் கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதை எடுக்க முற்பட்டபோது, தேமுதிகவினரும், பொதுமக்களும் திரண்டு அதைத் தடுத்து நிறுத்தினர்.

அப்போதும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கீழே கால்வாய் அமைக்கப்பட்டு அதன்மேலே கான்கிரிட் போட்டு மூடிவிட்டு அதே இடத்தில் மீண்டும் பயணியர் நிழற்குடையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிச்சயமாக அமைத்து தருகிறோம் என உறுதியளித்தனர்.

கால்வாய் வேலை முடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் திமுகவினரின் தூண்டுதலால் இதுவரை அந்த நிழற்குடையை அமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இதைக் கண்டித்து கடந்த டிசம்பர் மாதம் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

அப்போது காவல்துறையினர் தலையிட்டு தேமுதிகவினரிடம் பேசி கண்டிப்பாக அங்கே நிழற்குடை அமைக்க அதிகாரிகளிடம் பேசுகிறோம் என காவல்துறையினர் சமாதனம் செய்தனர். ஆனாலும் இன்றுவரை பயணியர் நிழற்குடை அமைக்க எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை.

இதைப் பார்க்கின்ற பொழுது தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது செய்த வியக்கத்தக்க மக்கள் பணிகளை மக்களிடம் இருந்து மறைக்கும் விதமாக, திமுகவினரின் தூண்டுதலால் அரசு அதிகாரிகள் செயல்படுவதாக மக்களே குற்றம்சாட்டுகிறார்கள். இதைக் கண்டித்து வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சர்ச்சைக்குரிய காட்சி விவகாரம்.. நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட அன்னபூரணி - ஜீ விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details