சென்னை:உலக தடுப்பூசி தினமான இன்று (நவ.10) அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்தம் வயதிற்கு ஏற்ற தடுப்பூசிகளை தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி அனைத்து அரசு மருத்துவ நிலையங்களில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆண்டுதோறும் உலக தடுப்பூசி தினம் நவம்பர் 10ஆம் தேதியும், தேசிய தடுப்பூசி தினம் 16ஆம் தேதியும் மற்றும் தடுப்பூசி வாரம் ஏப்ரல் 24 முதல் 30 வரை கடைபிடிக்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டில், தடுப்பூசியினால் தடுக்கப்படக் கூடிய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் டிப்தீரியா நோய் உலகளவில்
5,856 பேருக்கும், இந்தியாவில் 3,286 பேரும், ருபெல்லா உலகளவில் 17,836 பேரும், இந்தியாவில் 2,525 பேரும், தட்டம்மை உலகளவில் 2,05,153 பேருக்கும், இந்தியாவில் 40,967 பேரும் பாதிக்கப்பட்டனர்.
டெட்டனஸ் நோய் பாதிப்பு உலகளவில் 6,651 பேருக்கும், இந்தியாவில் 65 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. நியோ நேட்டல் டெட்டனஸ் பாதிப்பு உலகளவில் 2,076 பேருக்கும், இந்தியாவில் 65 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. பெர்டுசிஸ் நோய் உலகளவில் 62,646 பேருக்கும், இந்தியாவில் 4,362 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது.
குழந்தைகளை இந்த நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தடுப்பூசி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 1978ஆம் ஆண்டு 6 நோய்களை தடுப்பதற்கான விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டு, 12 வகையான தடுப்பூசியினால் தடுக்கப்படக் கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும், 9.15 லட்சம் பச்சிளம் குழந்தைகள் மற்றும் 10 லட்சம் கர்ப்பிணி பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
தடுப்பூசி வாரத்தின் அனைத்து நாட்களிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளளிலும், அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் outreach அமர்வுகளாக, கிராமம் மற்றும் நகரங்களில் அங்கன்வாடி மையம் மற்றும் குறிப்பிட்ட பொது இடங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்பம் பதிவு செய்தவுடன், Td தடுப்பூசி முதல் தவணையும், ஒரு மாதத்திற்குப் பிறகு இரண்டாம் தவணையும் வழங்கப்படுகிறது. ஊக்குவிப்பு தவணையானது கர்ப்பம் 3 வருடத்திற்குள் இருந்தால், இரணஜன்னி மற்றும் தொண்டை அடைப்பான் நோயைத் தடுப்பதற்காக அளிக்கப்படுகிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த ஒரு வருடத்திற்குள் மொத்தமாக 20 டோஸ் தடுப்பூசிகளும், இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 4 தவணைகள், 5-6 வயதுடைய சிறுவர்களுக்கு 1 தவணையும், 10 வயது மற்றும் 16 வயதுடையவர்களுக்கு முறையே 1 தவணையும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
சிறப்பு தடுப்பூசி திட்டங்களான தீவிர பல்ஸ் போலியோ திட்டம், தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0, சுகாதார பணியாளர்களுக்கு ஹெபடைடீஸ் பி தடுப்பூசி மற்றும் கோவிட் தடுப்பூசி ஆகியவைகளும் இத்துறையில் உள்ள தடுப்பூசிப் பிரிவில் செயல்படுத்தப்படுகிறது.
இதுநாள் வரை சுமார் 12.75 கோடி டோஸ்கள், கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டதில் முதல் தவணை 96.62 சதவீதமும், இரண்டாம் தவணை 90.32 சதவீதமும், 12 வயதிற்கு மேற்பபட்டவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரப் பணியாளர்களின் திறன்பட செயல்பட்டதினால், தமிழ்நாட்டில் தடுப்பூசி சாதனை 95 சதவீதத்திற்கு மேல் அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 கோடி மதிப்பிலான 3.20 கோடி தடுப்பூசிகள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து தடுப்பூசிகளும் தமிழ்நாட்டில் உள்ள 2,691 குளிர்பதன நிலையங்களில் (மாநில தடுப்பூசிக் கிடங்கு, மண்டல தடுப்பூசிக் கிடங்கு, மாவட்ட தடுப்பூசிக் கிடங்கு, ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைகள்) உபகரணங்கள் சேமிக்கப்பப்டடு பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
எனவே, இன்று உலக தடுப்பூசி தினத்தில் அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்தம் வயதிற்கு ஏற்ற தடுப்பூசிகளை தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி அனைத்து அரசு மருத்துவ நிலையங்களில் இலவசமாகப் பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாலாம்.
தடுக்கப்படக் கூடிய காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, H இன்புளூயன்ஸா-நிமோனியா மற்றும் மெனிஞ்ஜிடிஸ், இரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ருபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு நோய், நியுமோகோக்கல் நியுமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து பாதுகாத்திட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உடல் உறுப்பு தானம் செய்த ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு தமிழக அரசு மரியாதை!